'அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை'

Update:2022-09-02 18:58 IST


அ.தி.மு.க.வில் இனி இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.

இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். இதில் திருப்பூர் வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.என்.நடராஜ், பழனிசாமி, மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், கருணாகரன், சுப்பு, பாலசுப்பிரமணியம், முத்து, மகேஷ்ராம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், அம்மா பேரவை துணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது அ.தி.மு.க. என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அ.தி.மு.க. என்ற நிலை கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக்கொடி, இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் சொந்தமே தவிர, இனி வேறு யாரும் சொந்தம் கொண்டாடி கூக்குரல் இடமுடியாது என்று கோர்ட்டு தீர்ப்பு நிரூபித்து காட்டியிருக்கிறது.

இரட்டை தலைமைக்கு இடமில்லை

இதன் மூலம் மாபெரும் ஊழல் ஆட்சி செய்யும் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பி விட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலலிதா வழியில் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைப்பதற்கு தமிழக மக்கள் தயாராவார்கள். இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

இதற்கு மேல் எந்த மேல்முறையீட்டுக்கு சென்றாலும் எடுபடாது. அதை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்யும். கட்சி, சின்னம், தலைமை எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் இருக்கிறது. அ.தி.மு.க. கட்சி கொடியை மற்றவர்கள் பயன்படுத்தினால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்