தமிழக உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அதன்படி, சேலம் அரசு கலைக்கல்லூரியை பொறுத்தவரையில் 22 பாடப்பிரிவுகளில் உள்ள 1,460 முதலாம் ஆண்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 913 பேரும், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 13 பாடப்பிரிவுகளில் உள்ள 964 இடங்களுக்கு 8 ஆயிரத்து 322 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து முதல் நாளான நேற்று அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, தேசிய மாணவர் படையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதற்கான கல்லூரிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை முதலே சிறப்பு பிரிவினர் ஆர்வமுடன் கல்லூரிகளுக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். முடிவில், அவர்களுக்கு அந்தந்த கல்லூரி முதல்வர்கள் சேர்க்கை ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.