சின்னசேலத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 10 பேர் கைது
சின்னசேலத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
சின்னசேலம்,
சின்னசேலத்தில் மத்திய அரசை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால், ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிவர்மன், மாவட்ட தலைவர் ஆனந்த்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் கலையரசு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் இந்தியாவில் மீண்டும் குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசின் சர்வாதிகாரப்போக்கை கைவிட வேண்டும், இந்தியாவில் சமூக நீதியை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.