முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது.;
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் அருள் பாலிக்கும் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது. இதைமுன்னிட்டு குருநாதர் சக்தியம்மா ஆடிப்பூர வளைகாப்பு பற்றி ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், இளநீர், நறுமண பொருட்கள் உள்பட 21 அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து மஞ்சள் காப்பு, வளையல் மாலைகள் அலங்காரம் செய்யப்பட்டு, 21 வகையான வளைகாப்பு சாதங்கள் படையல் வைத்து, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து குருநாதர் சக்தியம்மா முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மன்களுக்கு வளைகாப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளியம்மன், வள்ளி, தெய்வானை ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் வளைகாப்பு அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.