ஆடி அமாவாசை திருவிழாவுக்கு 600 போலீஸ் பாதுகாப்பு

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.;

Update: 2023-08-14 19:48 GMT

விக்கிரமசிங்கபுரம்:

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஆடி அமாவாசை திருவிழா

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நாளை (புதன்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக அம்பை அருகே அகஸ்தியர்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மூலமாக நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் திருவிழா சிறப்பு அதிகாரிகளான நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் ஆகியோர் தலைமையில் அம்பை, சேரன்மாதேவி தாலுகாவை சேர்ந்த தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட வருவாய் துறையினர் சுமார் 50 பேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

600 போலீஸ் பாதுகாப்பு

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பக்தர்கள் கூடுதலாக வருவார்கள் என்பதால் போலீஸ் சூப்பிரண்டு, 2 கூடுதல் சூப்பிரண்டுகள், 3 துணை சூப்பிரண்டுகள் தலைமையில் சுமார் 600 போலீசார், நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்களுடன் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம்

இதற்கிடையே அம்பை தாசில்தார் சுமதி மற்றும் வருவாய் துறையினர் நேற்று பாபநாசம் சோதனை சாவடிக்கு சென்று தங்களது பணியை செய்து கொண்டு இருந்தனர். அப்போது வனத்துறையினர் பாபநாசம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கு உங்களால் எங்களது வேலையை செய்ய முடியவில்லை என பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அம்பை தாசில்தார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் நேற்று முதல் அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் பணியில் இருந்த வனத்துறையினர் பஸ்சில் இருந்த பக்தர்களிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா? என சோதனை செய்தனர். அப்போது வனத்துறை பணியாளர் ஒருவர், பக்தர் ஒருவரின் பையை அமுக்கி சோதனை செய்து ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்