ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரமோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்து பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்து பெற்ற பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். மேலும், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாள் பிரமோற்சவமும், 10 நாள் அவதார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமானுஜர் 1006-வது ஆண்டு அவதார திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதில் யானை வாகனம், குதிரை வாகனம், சூரிய பிரபை வாகனம் உளிட்ட வாகனங்களில் ராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவில் 9-வது நாள் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமானுஜர் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாள் பிரமோற்சவ விழா நேற்று முன் தினம் கொடியேற்றதுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சிம்ம வாகனத்திலும், நேற்று ஷேச வாகனம், ஹம்ச வாகனத்திலும் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளிப்பார். பிரமோற்சவத்தின் 7-வது நாள் தேர்த்திருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.