விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.

Update: 2022-08-24 18:11 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் வழியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

விநாயகர் சிலைகள் வைக்க இடத்தின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி பெற்ற பின் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். சிலைகளின் உயரம், மேடை போன்றவற்றின் அளவு குறிப்பிடப்பட வேண்டும். விழா ஏற்பாட்டாளர்கள் குழாய் வடிவ ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து ஊர்வலங்களும் மாலை 6 மணிக்கு முன் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மத ரீதியான பகுதிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல் துறையினர் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். வழிபாட்டிற்காக பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நிறுவிய நாளிலிருந்து 5 நாட்களுக்குள் கரைக்க எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் ஊர்வலம் அனுமதிக்கப்பட வழித்தடங்களில் சாலைகள் சீரமைக்கும் பணிகள், தேவையற்ற மரக்கிளைகள் அகற்றும் பணிகள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். காவல்துறை, வருவாய்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ள இடம், ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள், சிலைகளை கரைக்கும் இடங்கள் போன்றவற்றை அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்