மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும்- ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்தது.

Update: 2023-08-09 01:05 GMT


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்தது.

ஐகோர்ட்டில் மனு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த வக்கீல் மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றுப் பகுதியில் கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதிகளில் மாநகராட்சியின் நடமாடும் கழிப்பறை மூடப்பட்டு உள்ளது. இதனால் பெண்கள், முதியோர், போலீசார் மற்றும் பெண் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருபவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லை. ஏற்கனவே இருந்த கழிப்பறைகள் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது அகற்றப்பட்டன.

எனவே, சித்திரை வீதிகளில் போதுமான கழிப்பறை வசதியை ஏற்படுத்த கோரி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் கழிப்பறை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி 2 மாதத்தில் முடியும் என மாநகராட்சி தரப்பில் கூறினர். இதனால், இதை பதிவு செய்து கொண்டு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் இதுவரை கழிப்பறை அமைக்கப்படவில்லை. எனவே, மதுரை மாநகராட்சி ஆணையர் மீது கோர்ட்டு அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

உறுதி

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஏற்கனவே இருந்த இடத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு போதுமான கழிப்பறைகள் இருப்பதையும், அவற்றை முறையாக பராமரிப்பதையும் கோவில் நிர்வாகமும், மாநகராட்சியும் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்