ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதல் வேண்டும்-பயணிகள் கருத்து

ரெயில் பயணம் ஒரு சுகமான அனுபவமாகும். அலுப்பு இருக்காது. பாதுகாப்பானது. கட்டணம் குறைவு. எனவே உள்ளூர்வாசிகள் மட்டும் அல்ல, வெளி மாநிலத்தவர்களும் முதலில் தேர்வு செய்வது ரெயில் பயணத்தைத்தான்.

Update: 2023-01-27 19:00 GMT

ரெயிலில் முன்பதிவு

பஸ்களில் பல சோதனைகளுக்கு இடையே பயணம் செய்ய பெரும்பாலான பயணிகள் விரும்புவது இல்லை. அதே நேரத்தில் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது சாதாரண காரியமல்ல. 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் இடம் கிடைப்பது இல்லை.

பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களிலும் ரெயில் டிக்கெட்டுகள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கிறது.

சாத்தியம் இல்லை

அவசரமாக பயணம் செய்பவர்கள் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முறைகளை நாடிச்செல்கிறார்கள். ஆனால் அவை சாதாரண மக்களுக்கு பொருளாதார ரீதியாக சாத்தியமாவது இல்லை.

எனவே சாதாரண மக்கள் பயணம் செய்யும் வகையில் ரெயில்களில் வசதிகளை மேம்படுத்துவதுடன் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிப்பதே நல்ல தீர்வாக இருக்க முடியும். இதுபற்றி பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

கொரோனா தொற்று

பெரம்பலூரை சேர்ந்த ராஜா சுமன்குமார்:- கூறியதாவது. நான் அரியலூர் வழியாக சென்னைக்கும், திருச்சி வழியாக கோவைக்கும் ரெயிலில் பயணம் செய்வது வழக்கம். சமீப காலங்களில் ரெயில்கள் பெரும்பாலும் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ரெயில் வழித்தடங்களில் சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறுகளால் காலதாமதம் ஏற்பட்டால் அன்றி குறித்த நேரத்தில் சென்றடைவது ரெயில் பயணத்தின் சிறப்பாகும். பல்லவன், வைகை ஜனசதாப்தி போன்ற ரெயில்களில் பயணம் செய்ய கூட்டம் அதிகமாக காரணம் ரெயில்களின் பயண நேரம்தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றன. பஸ்களில் அதிக நேரம் குறுகிய சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்வது களைப்பை ஏற்படுத்தும். ஆனால் ரெயில் பயணம் சவுகரியமான ஒன்றாகும்.

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. வார நாட்களைவிட வார இறுதிநாட்கள், தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் ரெயில்களில் செயலி மூலம் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் கிடைப்பதில்லை. சமீபத்தில் பலநேரங்களில் ஏமாற்றம் மிஞ்சுவதால், பஸ் பயணத்தை நாட வேண்டியுள்ளது. எனவே அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய் அதிகரிக்கும்

பெரம்பலூர் எம்.எம். நகரை சேர்ந்த கட்டிட பொறியாளர் ஆரோ.மோகன்ராஜ்:- பெரம்பலூரில் ரெயில்வே நிலையம் இல்லாததால் அரியலூர் அல்லது திருச்சி ரெயில் நிலையத்திற்கு சென்று சென்னை செல்வது வழக்கம். விரைவு ரெயில்களின் முன்பக்கம் 2 முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளும், பின்பகுதியில் 1 முன்பதிவில்லாத பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன. பஸ் பயண நேரத்தைவிட குறைந்த நேரத்திற்குள் உரிய இடங்களுக்கு சென்றடைவதாலும், பயண நேரம் மற்றும் கட்டணம் குறைவாக இருப்பதாலும் நடுத்தர மக்களுக்கு ரெயில் பயணம் பெரிதும் உதவியாக இருக்கிறது. மேலும் உடல்நலக்குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி சுகாதார வளாகத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் அவர்களுக்கு ரெயில் பயணம் வசதியானதாகும். ஆனால் தற்போது ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளுக்கு சென்று பயணம் செய்கின்றனர். எனவே அனைத்து விரைவு ரெயில்களிலும் முன்பதிவு இல்லாத ரெயில்பெட்டிகளை கூடுதலாக இணைத்தால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும், ரெயில்வே துறைக்கும் கணிசமான வருவாய் அதிகரிக்கும்.

பிளாட்பாரத்தின் நீளம்

தெற்கு ரெயில்வே துறை முன்னாள் அதிகாரி சி.கே.சிவராஜ் கூறியதாவது:-

ரெயில் நிலைய பிளாட்பாரத்தின் நீளத்திற்கு ஏற்ப 19 பெட்டிகள் கொண்ட ரெயில்தான் இயக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் பிளாட்பாரங்களின் நீளமும், லூப் லைன் என்ற பிளாட்பாரம் அருகில் உள்ள மற்றொரு ரெயில் பாதையின் நீளமும் அதிகரிக்கப்பட்டு தற்போது 22 பெட்டிகள் அதாவது, 21 பெட்டிகளும், 1 என்ஜினும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்களில் பாமரமக்கள் பயணம் செய்வதற்காக முன்பதிவு இல்லாத பெட்டிகள் 2-க்கு பதிலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளில் 3 பெட்டிகள் குறைக்கப்பட்டு 2 பெட்டிகள் பி-3, பி-4 என்ற பெயரில் குளிர்சாதன வசதி கொண்ட உயர்தர பெட்டியாக மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டுமானால் பிளாட்பாரத்தின் நீளமும், லூப் லைன் நீளத்தையும் அதிகரித்தால் மட்டுமே சாத்தியப்படும். பயணிகள் நலன் கருதி ரெயில்கள் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்