தெருநாய்களை கட்டுப்படுத்த கூடுதலாக கருத்தடை மையங்கள்
கோவையில் தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக 2 இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.;
கோவையில் தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக 2 இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தெருநாய்கள் தொல்லை
கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் பெருக்கம் அதிகளவு காணப்படுகிறது. இரவு நேரங்களில் நகர் முழுவதும் தெருநாய்கள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றன. இந்த தெருநாய்கள் இரவு நேரங்களில் இருசக்கரத்தில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக உள்ளது. இதற்காக கோவை மாநகராட்சி பகுதியில் சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் புல்லுக்காடு ஆகிய 3 இடங்களில் தெருநாய்கள் கருத்தடை மையங்கள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் செயல்பட்டு வந்த கருத்தடை மையம் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள், முதியவர்களை துரத்துகிறது. இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உக்கடம் பகுதியில் 13 குழந்தைகளை தெருநாய்கள் துரத்திச்சென்று கடித்த சம்பவம் அரங்கேறியது. எனவே கோவை மாநகராட்சியில் தெருநாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கூடுதலாக 2 இடங்களில் கருத்தடை மையம்
தெருநாய்களை கட்டுப்படுத்த சீரநாயக்கன்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் பகுதியில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இதில் உக்கடத்தில் உள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறியதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உக்கடத்திலுள்ள கருத்தடை அறுவை மையம் மூடப்பட்டது.
இந்தநிலையில் தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் இந்த மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன்பிறகு கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கோவை மாநகராட்சி பகுதியில் கூடுதலாக 2 கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதன் மூலம் கோவை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.