தமிழகம், கேரளாவை சேர்ந்த இந்துமத தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம், கேரளாவை சேர்ந்த இந்துமத தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
'பி.எப்.ஐ.' என்று அழைக்கப்படுகிற 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு பயங்கரவாத செயல்களுக்கு துணை போகிறது என புகார் எழுந்தது.
பாப்புலர் பிரண்டுக்கு தடை
இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி 'பாப்புலர் பிரண்ட்' அமைப்பின் அலுவலகங்கள், அவற்றின் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதைக்கண்டித்து கேரளாவில் 23-ந் தேதி நடந்த முழு அடைப்பு, கண்டன பேரணிகளில் வன்முறை அரங்கேறியது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகள் மீது பெட்ரோல்குண்டுகள் வீசப்பட்டன. இவற்றின் தொடர்ச்சியாக, ஐ.எஸ். உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறி 'பாப்புலர் பிரண்ட்' அமைப்பை மத்திய அரசு கடந்த 28-ந் தேதி தடை செய்தது. அவற்றின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
தலைவர்களை கொல்ல சதி
இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று ஊர்வலம் நடத்தவிருந்தனர். ஆனால் நவம்பர் 6-ந் தேதி அந்த ஊர்வலத்தை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் உள்ள இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்புகள் தகவல் அனுப்பி உள்ளன. இரு மாநிலங்களிலும் உள்ள இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு போலீசுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்களது வீடுகள், அவர்கள் செல்லும் இடங்களிலும் உஷாராக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 5 தலைவர்களின் உயிர்களுக்கு ஆபத்துஇருப்பதாக மத்திய உளவு அமைப்புகள் தகவல் பகிர்ந்து உள்ளன. அதன் அடிப்படையில், அவர்களுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழ்நாட்டில் 2 மண்டலங்களாக செயல்பட்டு வருகிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகிகளில் 4 பேருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீவிரமாக இயங்கி வருகிற இந்து அமைப்புகளின் முன்னணி நிர்வாகிகள் வெளியே செல்கிறபோது, மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வீடுகளையும், அவர்கள் செல்லும் இடங்களையும் தீவிரமாக கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை, தசரா திருவிழாக்கள் கொண்டாடப்படுகிற நிலையில், இந்து அமைப்புகளின் தலைவர்கள் கூடுதல் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.