ரூ.3½ கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி

நாகையில் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் ரூ.3½ கோடியில் கூடுதலாக கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.;

Update: 2022-08-22 16:58 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் ரூ.3½ கோடியில் கூடுதலாக கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கூடுதல் கட்டிடம்

நாகை மாவட்டம் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் அரசினர் சுற்றுலா மாளிகை கூடுதல் கட்டிடம் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

நாகையில் கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் சுற்றுலா மாளிகை கட்டிடம் திறக்கப்பட்டது.

ரூ.3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம்

இதையடுத்து புதிதாக கட்டப்பட்ட விடுதிகளில் அமைச்சர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை தங்கி வருகின்றனர். நாகைக்கு வரும் மிக முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு தேவையான அறைகள் இங்கு இல்லை.

இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் அரசினர் சுற்றுலா மாளிகை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி ரூ.3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மிக முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு வசதியாக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

4 அறைகள்

தரைதளத்தில் மட்டும் 8 ஆயிரத்து 683.32 சதுர அடியில் கட்டிடம் அமைய உள்ளது.தரைத்தளத்தில் மிக முக்கிய பிரமுகர்கள் தங்க 4 அறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் உணவு அருந்தும் அறை, கூட்ட அரங்கு, காத்திருப்பு அறை, தாழ்வாரம், பாதுகாவலர் அறை மற்றும் வரவேற்பறை ஆகியவை கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, பொதுப் பணித்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் மோகனசுந்தரம், உதவி பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்