சீமான் மீதான நடிகை விஜயலட்சுமியின் புகார்: ஊட்டி விரைந்த தனிப்படை போலீசார்

நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.;

Update: 2023-09-02 15:35 GMT

நீலகிரி,

நடிகர் விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படி புகார் கொடுத்தார்.

இதுகுறித்து நேற்றுமுன்தினம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். தற்போது சீமான் ஊட்டியில் உள்ள நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்