பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர்: மனைவி-மகனுடன் சிக்கினார்

பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர், மனைவி, மகனுடன் போலீசில் சிக்கினார்.;

Update: 2023-06-16 22:56 GMT

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி பூமாரி என்ற முத்துமாரி (வயது 57). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி இரவில் தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று பூமாரி கழுத்தில் அணிந்து இருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இதேபோன்று கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி மனைவி வெள்ளைத்தாய் (44) கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் ரோட்டில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் வெள்ளைத்தாய் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றனர்.

3 பேர் கைது

இந்த நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் நகை பறிப்பில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பச்சையங்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த பீருஷா மகன் சனாபுல்லா (வயது 42), அவருடைய மகன் ஜாபர் (19) என்பதும், இதற்கு சனாபுல்லா மனைவி ரஷியா (38) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

துணை நடிகர்

அதாவது, கைதான சனாபுல்லா உள்ளிட்ட 3 பேரும் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர்.

துணை நடிகரான சனாபுல்லா மற்றும் அவருடைய மகன் ஜாபர் ஆகிய 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களிடம் நகை பறித்து விற்றுள்ளனர்.

அதில் கிடைத்த பணத்தில் சனாபுல்லா 'நான் அவன்தான்' என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். அதில் சனாபுல்லாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை வெளியிட இருந்த நிலையில் சனாபுல்லா குடும்பத்தோடு தற்போது சிக்கிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

கைதான சனாபுல்லா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் நேற்று கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி கடற்கரை செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர்களுடன் நகை பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்ற னர்.

Tags:    

மேலும் செய்திகள்