கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்
கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜரானார்.;
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சந்தானம், இவர் கட்டிட காண்டிராக்டராக தனியார் நிறுவனம் நடத்தி வரும் வளசரவாக்கம், சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 40) என்பவருடன் சேர்ந்து குன்றத்தூர் அடுத்த கோவூர், மூன்றாம் கட்டளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் கட்டிடம் கட்ட திட்டமிட்டதாக தெரிகிறது. இதற்காக சந்தானம் தனது பங்களிப்பாக ஒரு பெரிய தொகையை சண்முகசுந்தரத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கட்டிடம் கட்டும் திட்டத்தை கைவிட்டதால் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் சந்தானம் கேட்டு வந்துள்ளார். இது தொடர்பான பணப்பிரச்சினையில் கடந்த 2017-ம் ஆண்டு இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து நேற்று பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சந்தானம் ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வரும் 15-ந் தேதி மீண்டும் சந்தானம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.