கிருஷ்ணகிரி அருகே முதல் முறையாக பூர்வீக கிராமத்துக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்

கிருஷ்ணகிரி அருகே பூர்வீக கிராமத்திற்கு முதல் முறையாக சென்ற நடிகர் ரஜினிகாந்த், பெற்றோர் நினைவகத்தில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update:2023-09-01 03:29 IST

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுப்பம் கிராமம் நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள், அவருடைய பெற்றோர் வாழ்ந்த ஊர் ஆகும். ரஜினிகாந்தின் உறவினர்கள் பலரும் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில் பெங்களூருவில் வசித்த ரஜினிகாந்த், திரைத்துறையில் நுழைந்த பின்னர் சென்னையில் வசித்து வருகிறார்.

தற்போதும், ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ் நாச்சிகுப்பத்தில் நடைபெறும் உறவினர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது பூர்வீக கிராமமான நாச்சிகுப்பத்தில் பெற்றோர் ரானோஜிராவ்- ராம்பாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அப்போது நினைவகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. அங்கு ரஜினி ரசிகர்கள் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ரஜினி பிறந்தநாள் நிகழ்ச்சி, அவருடைய திரைப்படம் வெளியீட்டின் போது உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

நாச்சிகுப்பத்தில் உள்ள இந்த நிலத்தை ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ் நேரடியாக பராமரித்து வந்தார். அங்கு ரானோஜிராவ் - ராம்பாய் சிலைகளுடன் நினைவகம் கட்டப்பட்டது. மேலும் அந்த பகுதி கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் 'ஜெயிலர்' படம் வெளியான பின்னர் ரஜினிகாந்த் வட மாநிலங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பினார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சென்ற அவர் தான் படித்த பள்ளி, தான் பணிபுரிந்த போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்த்தார்.

இந்த நிலையில், நேற்று பெங்களூருவில் இருந்து ரஜினிகாந்த் கார் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெற்றோரின் பூர்வீக ஊரான நாச்சிகுப்பத்துக்கு முதல்முறையாக சென்றார். காலை 11.35 மணி அளவில் நாச்சிகுப்பம் சென்ற ரஜினிகாந்த் அங்குள்ள நினைவகத்தில் பெற்றோர் ரானோஜிராவ்- ராம்பாய் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்குள்ள சாமி சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

இதைத்தொடர்ந்து நினைவகத்தை சுற்றிப்பார்த்த ரஜினிகாந்த் தனது உறவினர்கள் மற்றும் அங்கு பணிபுரிந்து வந்தவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார். சுமார் 20 நிமிடங்கள் அங்கிருந்த ரஜினிகாந்த், பின்னர் காரில் கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு புறப்பட்டு வந்தார். ரஜினிகாந்த் வந்த தகவல் அறிந்து ஏராளமான ரசிகர்கள் அங்கு சென்றனர். ஆனால் அவர் சென்று விட்டதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ் கூறியதாவது:-

நீண்ட நாட்களாக பெற்றோரின் ஊரான நாச்சிகுப்பம் வரவேண்டும் என ரஜினி திட்டமிட்டிருந்தார். தற்போது நாச்சிகுப்பம் வந்து பெற்றோர் நினைவகம் வந்து மரியாதை செலுத்தி விட்டு சென்றார். அவர் மீண்டும் வருவார். அப்போது ரசிகர்களை சந்திப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்