"குடும்பத்தோடு கைவரிசை" பெண்களிடம் நகை பறித்து சினிமா எடுத்த நடிகர்,மனைவி, மகனுடன் கைது

கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் மராட்டிய மாநிலத்தை பூர்வீமாக கொண்டவர்கள். தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

Update: 2023-06-16 10:52 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பைக்கில் சென்று பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தந்தை, மகன் மற்றும் தாய் ஆகியவற்றை போலீசார் கைது செய்துள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்டு திரைப்படம் எடுத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்காளா தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பரவது மனைவி பூமாரி என்ற முத்துமாரி ( வயது 57). இவர் கடந்த மாதம் 15 ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பூமாரி கழுத்தில் அணிந்து இருந்த 12 பவுன் தங்க நகையை பறித்து விட்டு சென்றனர்.

இதே போன்று கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த கதிரேசன் கோவில் ரோடு கோபால்சாமி மனைவி வெள்ளைத்தாய் (வயது 44) என்பவரிடம் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த 2 வழிப்பறி சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கோவில்பட்டி துணை போலி சூப்பர் வெங்கடேஷ் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் சப் இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜ் ஹரி கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் பணியை முடித்து விட்டார்.

மேலும் 2 இடங்களில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பச்சையங்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த பீருஷா மகன் சனாபுல்லா (வயது 42), அவரது மனைவி ரஷியா (வயது 38), மகன் ஜாபர் (வயது19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் மராட்டிய மாநிலத்தை பூர்வீமாக கொண்டவர்கள். தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் குடும்ப்பத்தோடு திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

தந்தையும், மகனும் பைக்கில் சென்று வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட நகைகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சனாபுல்லா நான் அவன் தான் என்ற சினிமா எடுத்து உள்ளார். அதனை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில் கோவில்பட்டியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த திரைப்படத்தில் சனாபுல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்களிடம் பைக் ஓட்டும் போது ஒருவரும், நகையை பறித்ததும் மற்றொருவர் என மாற்றி, மாற்றி பைக்கினை ஓட்டி காவல்துறையினரை குழப்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திரைப்படம் எடுக்க குடும்பமே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்