நிரம்பிய கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை-யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

கண்மாய்கள் நிரம்பியதால் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-11-14 18:45 GMT

திருப்பத்தூர்

கண்மாய்கள் நிரம்பியதால் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

யூனியன் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று யூனியன் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு யூனியன் தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மீனாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் யூனியன் தலைவர் பேசும்போது, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கண்மாய்களில் நீர் நிரம்பியுள்ளதால் மடைகளில் உடைப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையாக மணல் மூடை அமைக்கவும், கண்மாய் உடைப்புகளை தடுக்கவும், அலுவலகத்தில் இதுசம்பந்தமாக அதிகாரிகளை கவுன்சிலர்கள் அணுகலாம் என்றார்.

கண்மாய் மடைகள்

இதை தொடர்ந்து மாதாந்திர வரவு செலவுகள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் கவுன்சிலர் ராமசாமி பேசும்போது, தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை அனுமதி அளிக்காததால் சாலை வசதி குறைபாடு உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி நிவர்த்தி செய்யவும், மலம்பட்டி கண்மாய் மடைகளை சரிசெய்யவும் கோரினார்.

கவுன்சிலர் சகாதேவன் கூறும்போது, இக்கூட்டத்தில் மின்வாரிய குறைக்களைக் கூற சம்மந்தபட்ட அலுவலர்களை அழைக்க வேண்டும். பிராமணப்பட்டி, பூலாம்பட்டி பகுதிகளில் மின் கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளதால் சரிசெய்ய வேண்டும். பிராமணப்பட்டி அங்கன்வாடி கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மேம்பாட்டு பணிகள்

கவுன்சிலர் சுமதி பேசும்போது, கீழ்நிலை பள்ளிக் கட்டிடத்திற்கு மேம்பாட்டுப் பணிகள் செய்ய வேண்டும் என்றார். இக்கோரிக்கைகளுக்குப் பதில் அளித்த யூனியன் என்ஜினீயர், பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் வேலைகள் தொடங்கப்பட்டு சரிசெய்யப்படும் என்றார்.

இதைதொடர்ந்து வேளாண்மை அலுவலர் தனலெட்சுமி, பயிர்காப்பீடு குறித்தும், தரிசு நில மேம்பாடு குறித்தும் வார்டு உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார். முன்னதாக மேலாளர் செழியன் வரவேற்றார். மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் இளையராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்