திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் அமைக்க நடவடிக்கை

திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.;

Update: 2023-04-19 19:03 GMT

கண்ணாடி, குடை

திருப்பத்தூர் போக்குவரத்து போலீசாருக்கு கூலிங் கிளாஸ் கண்ணாடி மற்றும் குடை வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி 39 போக்குவரத்து போலீசாருக்கு கருப்பு கண்ணாடி, பெரிய அளவிலான குடைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், வெயில் மற்றும் மழை என எதையும் பார்க்காமல் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உடல் நிலை சீராக இருந்தால் தான் காவல் துறை நிர்வாகமும் சிறப்பாக இருக்கும். எனவே, வெயில் தாக்கத்தால் ஏற்படும் உடல் தொந்தரவுகளை தீர்க்கவும், கோடை வெயிலில் இருந்து போக்குவரத்து காவலர்களை பாதுகாக்க 39 காவலர்களுக்கு கூலிங் கிளாஸ், குடைகள் வழங்கப்படுகிறது.

சிக்னல் அமைக்க நடவடிக்கை

வெயில் நேரங்களில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்கள் சாலையின் ஓரத்தில் நிழல் தரும் குடையை அமைத்து அங்கு நிழலில் நின்றபடி போக்குவரத்தை சீர் செய்யலாம். திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதுப்பேட்டை கூட்ரோடு, டவுன்போலீஸ் நிலையம் சந்திப்பு, தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திலேயே போக்குவரத்து போலீஸ் நிலையமும் செயல்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க தனியாக இடம் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். இடம் தேர்வு செய்யப்பட்டு அரசிடம் இருந்து உத்தரவு வந்த உடன் போக்குவரத்து போலீஸ் நிலையம் தனி கட்டிடத்தில் அமைக்கப்படும் என்றார்.

பின்னர் கிருஷ்ணகிரி, வாணியம்பாடி சாலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மைக்கு மூலம் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும், டிரைவிங் லைசென்ஸ், வாகனங்களை புதுப்பித்தல் போன்றவற்றை கட்டாயம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்

நிகழ்ச்சியில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கஸ்தூரி, அருண்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்