பாதாள சாக்கடை திட்ட குழாய்களை ரூ.8 கோடி செலவில் மாற்ற நடவடிக்கை-ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தகவல்

ராமநாதபுரம் நகரில் பாதாளசாக்கடை திட்ட குழாய்களை ரூ.8 கோடி செலவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.;

Update: 2023-02-27 18:45 GMT


ராமநாதபுரம் நகரில் பாதாளசாக்கடை திட்ட குழாய்களை ரூ.8 கோடி செலவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி கூட்டம்

ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் பிரவீன்தங்கம், ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் அண்ணாசிலை அருகே கருணாநிதி நினைவு கொடிக்கம்பம் அமைக்க தலைவர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு பா.ஜ.க. கவுன்சிலர் குமார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மற்ற கவுன்சிலர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் குமார்: ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த திட்ட பராமரிப்பிற்கு தனியாக பொறியாளர் நியமிக்க வேண்டும்.

ஆணையாளர்: விரைவில் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

கவுன்சிலர் அய்யனார்: ராமநாதபுரம் நகர் மற்றும் வெளிப்பட்டிணம் பகுதியில் உள்ள வக்பு வாரியத்தின் கீழ் இயங்கும் மீன்மார்க்கெட்டிற்கு நகராட்சி சார்பில் உரிமம் வழங்காமல் தாமதம் செய்யப்படுகிறது. உரிமம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கவுன்சிலர் தனபாண்டியம்மாள்: மீன் மார்க்கெட்டுக்கு விரைவில் உரிமம் வழங்க வேண்டும்.

ஆணையாளர்: உரிமம் வழங்க உத்தரவிடப்படும்.

பாதாள சாக்கடை குழாய்

பொறியாளர்: சொக்கலிங்கபுரம் முதல் குண்டூரணி வரையிலான பாதாள சாக்கடை குழாய், இந்திராநகர் முதல் கழுகூரணி வரை உள்ள 5½ கிலோ மீட்டர் நீள பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சிமெண்டு குழாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய் பதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சொக்கலிங்கபுரம் முதல் குண்டூரணி வரை ரூ.3.40 கோடியிலும், இந்திராநகர் முதல் கழுகூரணி வரை ரூ.4.40 கோடி மதிப்பிலும் புதிய குழாய் பதிக்க மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 2 இடங்களிலும் குழாய்களை சீரமைத்தாலே பாதாள சாக்கடை பிரச்சினை 80 சதவீதம் குறைந்துவிடும்.

கவுன்சிலர் ராஜாராம்பாண்டியன் கோபால்: சின்னச்சாமி புதுத்தெருவில் பாதாள சாக்கடை உடைப்பு சரிசெய்யப்படவில்லை.

தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் மணிகண்டன்: காவிரி குடிநீர் முழுமையாக வராததால் ஒருகுடம் தண்ணீர் ரூ.15-க்கு விற்கப்படுகிறது.

தலைவர்: ராமநாதபுரத்திற்கு 33 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால் 25 லட்சம் லிட்டர்தான் வருகிறது. அதனை வைத்து சப்ளை செய்து வருகிறோம். விரைவில் 55 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய பஸ்நிலையம் கட்ட ரூ.20 கோடியில் பணிகளை தொடங்க அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.30 கோடியாக இருந்தாலும் முதல்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலையம் முழுமையாக இடித்துவிட்டு சந்தைகடை பகுதியையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் கட்டப்படும்.

டெண்டர்

ஆணையாளர்: நகராட்சியில் குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணி தனியார் மூலம் நிறைவேற்ற டெண்டர் விடப்பட உள்ளது.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

இந்த கூட்டத்தில் மங்கையற்கரசி, காளிதாஸ் உள்பட 9 கவுன்சிலர்கள் தங்களது வார்டில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கூட்டத்தை புறக்கணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்