சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் நல இயக்குனர் அறிவுறுத்தல்

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நல இயக்குனர் சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.;

Update: 2022-06-14 16:36 GMT

தர்மபுரி:

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நல இயக்குனர் சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.

மானிய நிதி உதவி

சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறுபான்மையினர் நல இயக்குனர் சுரேஷ்குமார் கலந்துகொண்டார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறுபான்மையினர் நல இயக்குனர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் நன்கொடை மூலம் திரட்டும் நிதியை போல் 2 மடங்கு மானிய நிதியுதவியை அரசு எவ்வித நிபந்தனைகளும் இன்றி வழங்குகின்றது. இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் சார்பில் நன்கொடை வசூல் செய்து, வங்கி கணக்கில் செலுத்தும் சங்கங்களுக்கு மானிய நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஊக்குவிப்புத்தொகை

தமிழ்நாடு அரசு தற்போது சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கவும், தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சிறும்பான்மையின மாணவிகளுக்கு கல்வி ஊக்குவிப்புத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து சிறுபான்மையின மாணவிகளுக்கும் இந்த கல்வி ஊக்குவிப்புத்தொகை கிடைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடனை வழங்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் 41 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நல இயக்குனர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்