கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ஜூலை மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை; அமைச்சர் சேகர்பாபு தகவல்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை ஜூலை மாதத்துக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2023-05-22 22:57 GMT

தாம்பரம்,

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சி.எம்.டி.ஏ.வின் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு ஆகியோர் செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் உள்ள சென்னை வெளிவட்டச் சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் முடிச்சூரில் உள்ள சீக்கனான் ஏரியை ரூ.2 கோடியிலும், ரங்கா நகர் குளத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் மேம்பாட்டு பணி தொடர்பாகவும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் ஈஸ்வரி நகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைப்பது தொடர்பாகவும், ஆலந்தூர் புது தெருவில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் அமைப்பது தொடர்பாகவும் நேரடியாக சென்று அமைச்சர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் முன்னதாக இந்த நிலையத்துக்கு வரும் பஸ்களின் போக்குவரத்தை கருத்தில் கொள்ளாமல் வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்த பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது என்னென்ன அடிப்படை தேவைகள் என்று ஒவ்வொன்றையும் ஆய்வு செய்கின்ற போது அந்த மக்களுடைய அடிப்படை தேவைகள் எதையும் கணக்கிடாமல் இந்த பஸ் முனையம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே, இந்த பஸ் நிலையத்திற்கு உண்டான அணுகு சாலைகள், அதேபோல் இந்த பஸ் நிலையத்திற்கு வருகின்ற போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றை கணக்கிட்டு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம்.

ஜூலை மாத இறுதிக்குள்...

ஜூன் மாத இறுதிக்குள் இதை தொடங்க வேண்டுமென்ற நிலைபாடு இருந்தாலும், பஸ் நிலையம் தொடங்கப்பட்ட பிறகு மக்களுடைய தேவைகள் எவையும் விட்டுவிடாமல் மக்களுடைய பயன்பாட்டிற்கு வருகின்ற போது மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குண்டான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்பாடு செய்வதற்கு ஜூன் மாதத்திற்குள் முடிந்த அளவிற்கு ஏற்பாடுகளை முடித்து, பஸ் நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

பணிகள் முடிந்து ஓரிரு வாரங்கள் தள்ளிப்போனாலும் ஜூலை மாத இறுதிக்குள்ளாக நிச்சயமாக இந்த பஸ் நிலையத்தை திறப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் நிறைவு செய்வோம்.

ஆகவே, குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக வெகுவிரைவில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைத்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்