மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை விபத்தில்லா சாலையாக மாற்ற நடவடிக்கை

மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை விபத்தில்லா சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா தெரிவித்தார்.

Update: 2022-10-18 18:45 GMT

பொள்ளாச்சி

மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை விபத்தில்லா சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா தெரிவித்தார்.

ஆய்வு

பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து வருவாய்த்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து விபத்துகளை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் சின்னாம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தாசில்தார் வைரமுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட ஆணையர் கோவிந்தசாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமுவேல், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் பேசும்போது கூறியதாவது:-

விபத்துகள் அதிகரிப்பு

உடுமலை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பஸ்களை நிறுத்த தனி இடவசதி இல்லாததால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் சாலையில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாலையில் உள்ள தடுப்பு கம்பிகளால் விபத்து அதிகமாக நடைபெறுகிறது.

மேலும் 1996 முதல் 1999-ம் ஆண்டு வரை சுமார் 325 சேதார விபத்துகளும், 37 உயிரிழப்பு விபத்துகளும் சேர்த்து மொத்தம் 359 விபத்துகள் நடந்து உள்ளன. 1999-ம் ஆண்டுக்கு பிறகு 2022-ம் ஆண்டு தற்போது வரை இந்த விபத்து 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான விபத்துகளும், 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. எனவே சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்புகளை அகற்றி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விபத்தில்லா சாலை

சப்-கலெக்டர் பிரியங்கா பேசும்போது கூறியதாவது, உடுமலை ரோட்டில் இணைப்பு சாலை குறுகலாக உள்ளது, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மற்ற துறை அதிகாரிகளுடன் இணைந்து சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் விபத்துகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை உடுமலை ரோட்டை விபத்தில்லா சாலையாக மாற்ற, பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். கோட்ட பொறியாளர் சரவணசெல்வம் பேசும்போது கூறுகையில், தமிழக அரசு விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உடுமலை சாலையில் ஆய்வு மேற்கொண்டு விபத்தில்லா பகுதியாக உருவாக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்