அனுமதியின்றி தீபமலை மீது ஏறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவண்ணாமலையில் அனுமதியின்றி தீபமலை மீது ஏறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-03-10 17:32 GMT


திருவண்ணாமலையில் அனுமதியின்றி தீபமலை மீது ஏறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிரிவலம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் சுமார் 2668 அடி உயரமுள்ள மலை உள்ளது.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இம்மலையை சுற்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். மேலும் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இம்மலையின் உச்சியில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும்.சமயத்தில் மட்டுமே இம்மலை மீது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறி சென்று வர மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மலை மீது ஏற தடை

மற்ற நாட்களில் மலை மீது பக்தர்களோ, பொதுமக்களோ ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் உரிய அனுமதியின்றி மலைக்கு சென்று வருகின்றனர்.

சில சமயங்களில் மலை மீது அனுமதியின்றி ஏறும் நபர்கள் திரும்பி வர வழி தெரியாமல் மலையில் சிக்கிக் கொள்கின்றனர்.

பின்னர் அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் சென்று மீட்டு அழைத்து வருகின்றனர். கடந்த ஓரிரு தினங்களாக வெளிநாட்டினர் சிலர் மலை மீது ஏறி சென்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களை மலைக்கு சில புரோக்கர்கள் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.

சட்டப்படி நடவடிக்கை

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தீப மலை மீது அத்துமீறி ஏறும் நபர்கள் மீது வனத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மலை மீது அத்துமீறி எவரேனும் செல்கின்றனரா என்று தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் வெளிநாட்டினர் மலை மீது சென்று வரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

எனவே மலை மீது வெளிநாடு மற்றும் வெளிமாநில பக்தர்களை தவறாக வழி நடத்தி தீபமலை மீது அத்துமீறி அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மீது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்