நகை, பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருமணம் செய்வதாக கூறி பணம், நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் இளம்பெண் புகார் மனு அளித்தார்.;
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் அதுதொடர்பாக கேட்டறிந்தார்.
கூட்டத்தில் காட்பாடியை சேர்ந்த இளம்பெண் அளித்த மனுவில், எனக்கு திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறேன். கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஆலத்தூரை சேர்ந்த வாலிபர் சமூக வலைத்தளத்தில் அறிமுகம் ஆனார். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகினார்.
நகை- பணம்
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி 58 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் என்னிடம் வாங்கினார். இதுவரை என்னை திருமணம் செய்யாமலும், பணம், நகையை திருப்பி தராமலும் ஏமாற்றி வருகிறார். அவர் மீது காட்பாடி போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அணைக்கட்டை அடுத்த ஓங்கம்பாடியை சேர்ந்த மணியம்மாள் அளித்த மனுவில், நான் கடந்த 10-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார். அதனை எடுப்பதற்காக திரும்பியபோது எனது கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
சான்றிதழ்
வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த கவுசல்யா அளித்த மனுவில், எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறேன். எனது கல்விச்சான்றிதழ்கள் கணவர் வீட்டில் உள்ளது. குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் நான் வேலைக்கு செல்வதற்கு கல்விசான்றிதழ்கள் தேவைப்படுகிறது. ஆனால் அவற்றை தர கணவர் மறுக்கிறார். அவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கும்படி டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டார்.