பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலூர் மாநகராட்சியில் பொதுஇடங்கள், கானாறு உள்ளிட்டவற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்;

Update: 2022-09-21 13:09 GMT

வேலூர் மாநகராட்சியில் பொதுஇடங்கள், கானாறு உள்ளிட்டவற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி, மாநகராட்சி பகுதிகளை தூய்மை வைத்திருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தினசரி பணிகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

வேலூர் மாநகராட்சி பகுதியை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் பொது இடங்கள், கால்வாய், கானாறு உள்ளிட்டவற்றில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் வீடுகள் தோறும் சரியாக குப்பைகள் வாங்க வராத காரணத்தால் தான் பொதுஇடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

நடவடிக்கை

எனவே குறிப்பிட்ட நாட்களில் வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் சென்று குப்பைகள் வாங்க வேண்டும். மக்கும், மக்காத குப்பைகள் மற்றும் காய்ந்த, ஈரமான குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.

வாகனங்களில் குப்பைகளை எடுத்து வந்து பொதுஇடங்கள், கானாறு, கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனை தடுக்க அதிகளவு குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அங்கு குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தரம் பிரிக்கப்பட்ட காய்ந்த குப்பைகளை 45 நாட்களில் அரைத்து விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும். அதனை உரமாக பயன்படுத்தலாம். குப்பைகளை அரைக்கும் எந்திரங்கள் விரைவில் வாங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாநகராட்சி உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்