ஓட்டல்களில் அதிரடி சோதனை: 80 கிலோ கெட்டுப்போன சவர்மா, சிக்கன் பறிமுதல்
சிவகங்கையில்அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 80 கிலோ கெட்டுப்போன சவர்மா, சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கையில்அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 80 கிலோ கெட்டுப்போன சவர்மா, சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
சமீபத்தில் அசைவ உணவகத்தில் வழங்கப்படும் சவர்மா என்ற உணவு சாப்பிட்ட சிறுமி ஒருவர் இறந்து போனார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சவர்மா தயாரிக்கும் உணவகங்களில் சோதனை நடத்த உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நகராட்சி துறைக்கு சுகாதார மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிவகங்கை நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் தலைமையில் நகராட்சி ஆய்வாளர் தினேஷ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சிவகங்கை நகரில் சவர்மா உணவு தயாரிக்கும் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர்.
சிவகங்கை தொண்டி ரோடு, மதுரை ரோடு, உடையார் சேவை ஊரணி போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில கடைகளில் பழைய சவர்மா 30 கிலோ, அதிக வண்ணம் சேர்த்த சிக்கன் 50 கிலோ ஆகியவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
அபராதம்
மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இது தவிர சுகாதார முறைப்படி இல்லாத மேலும் 5 கடைகளுக்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சரவணகுமார் கூறியதாவது:- சிவகங்கை நகரில் உள்ள உணவகங்களில் தொடர் சோதனை நடத்த உள்ளோம். கெட்டுப்போன உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று உணவகங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.