தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்து
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 6 அபாயகரமான பூச்சிக் கொல்லி மருந்துகளை 60 நாட்கள் தடை செய்து அரசாணை வழங்கப்பட்டது. இந்த நிலையில் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை குளோரிபைரிபாஸ், மோனோகுரோடாபாஸ், புரபோனாபாஸ், அசிபேட், புரபோனாபாஸ் -சைப்பர்மெத்திரின், குளோரிபைரிபாஸ்- சைப்பர்மெத்திரின் ஆகிய அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சி கொல்லிகளை தற்காலிமாக தடை செய்திட அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மனித உயிருக்கும், விலங்குகளுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு செய்ய வேளாண்மை இணை இயக்குனர் வடமலை தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன், வேளாண்மை துணை இயக்குனர் (திட்டம்) செல்வராஜூ, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நடவடிக்கை
இவர்கள் பூச்சி மருந்து கடைகளில் திடீர் ஆய்வு செய்வார்கள். அரசாணையை மீறி அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தால் வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட கடை மற்றும் உரிமையாளர் மீது பூச்சி மருந்து சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி மேற்குறிப்பிட்ட 6 அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை 60 நாட்கள் தற்காலிகமாக தடை செய்து பூச்சிக்கொல்லி சட்டம் 1968-ல் வழங்கப்பட்டுள்ள உட்பிரிவுகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இம்மாதிரியான பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்கவோ கூடாது. அனைத்து பூச்சி மருந்து நிறுவனங்களும் விவசாயிகளும் இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். விவசாயிகள் இது குறித்து புகார்களை தங்கள் வட்டார வேளாண்மை அலுவலர் மற்றும் பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.