கூடுதல் விலைக்கு மதுவிற்றால் நடவடிக்கை: பவானிசாகரில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.;

Update:2023-07-03 02:50 IST

பவானிசாகர்

கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

வாய்க்கால் சீரமைப்பு பணிகள்

பவானிசாகரில் தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பது குறித்த மனு வந்துள்ளது. மாவட்ட கலெக்டரிடம் பேசி விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படும். கீழ்பவானி வாய்க்கால் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக இரு சாராரிடம் பேசி வருகிறோம். அனைவருடைய ஒப்புதலை பெற்று செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

கூடுதல் விலைக்கு விற்பனை

டாஸ்மாக் மதுக்கடைகளில் சில இடங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருகிறது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வரும் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மனு அளித்துள்ளனர். மாவட்ட கலெக்டரிடம் கலந்து பேசி கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக கவர்னர் தன்னுடைய உரிமையை மீறி செயல்படுகிறார். அவருக்கென ஒரு வரைமுறை உள்ளது. அரசாங்கத்தில் இருந்து கவர்னருக்கு ஒரு கோப்பு அனுப்பப்பட்டால் ஒரு முறை திருப்பி அனுப்பலாம். 2-வது முறை அனுப்பும்போது கவர்னர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். சட்டத்திற்குட்பட்டு தான் அரசாங்கம் எதையும் செய்கிறது. கவர்னர் சில கேள்விகளை கேட்கிறார். அவரின் கேள்விகளுக்கு அரசு மூலம் சரியான பதில் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்