பேரூராட்சி துணை தலைவர் மீது நடவடிக்கை
மக்கள் பிரச்சினைகளை பேச விடாமல் தடுக்கும் ஜெகதளா பேரூராட்சி துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.
ஊட்டி,
மக்கள் பிரச்சினைகளை பேச விடாமல் தடுக்கும் ஜெகதளா பேரூராட்சி துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊட்டி கீழ் கோடப்பமந்து பொதுமக்கள் கொடுத்த மனுவில், கீழ் கோடப்பமந்து பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
எங்கள் பகுதியில் சுப நிகழ்ச்சிகள் நடத்த போதிய வசதிகள் இல்லை. அரசு உயர்நிலை பள்ளி அருகே உள்ள இடத்தில் சமுதாயக்கூடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. உல்லாடா பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்திற்கு செல்லும் பொதுப்பாதையை தனியார் பள்ளி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, பொதுப்பாைதயை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
துணை தலைவர்
ஜெகதளா பேரூராட்சி பெண் கவுன்சிலர்கள் எசோதா, பிரமீளா ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
7, 11-வது வார்டுகளில் குடிநீர் வினியோகம் உள்பட அன்றாட பணிகளை பேரூராட்சி பணியாளர்களை செய்யவிடாமல் சிலர் தடுக்கின்றனர். இதுகுறித்து பேரூராட்சி கூட்டத்தில் கேட்டபோது, எந்த நிதி வந்தாலும் என்னை கேட்காமல் அனுமதிக்க முடியாது என்று துணை தலைவர் பேசுகிறார். மேலும் என்னை கேட்காமல் தூய்மை பணியாளர்களை எந்த வார்டுக்கும் அனுப்பக்கூடாது என்று செயல் அலுவலருக்கு உத்தரவிடுகிறார்.
எனவே, மக்கள் பிரச்சினைகளை பேச விடாமல் தடுக்கும் பேரூராட்சி துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 108 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.