மோசடி செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை
முதுமலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் மோசடி செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூடலூர்
முதுமலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தில் மோசடி செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க ஆலோசனை கூட்டம் கூடலூரில் உள்ள தோட்ட தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குணசேகரன், ஏழுமுறம் சங்க பொறுப்பாளர் சந்திரன், பொக்காபுரம் ராஜேஷ், வர்கீஷ், மாதன், பந்தலூர் ஒன்றிய ஏ.ஐ.டி.யூ.சி. பொறுப்பாளர் முத்துகுமார், முகமது கனி, ராஜிவ், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நீண்ட காலம் போராடி பெற்ற 2006 வன உரிமை அங்கீகார சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் இழப்பீட்டு தொகையும், நிலமும் வழங்கிட வேண்டும்.
அலுவலர்கள் மீது நடவடிக்கை
இதேபோல் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய இழப்பீட்டு தொகையில் மோசடி செய்து பயனாளிகளை ஏமாற்றிய வன அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள், வக்கீல்கள், நில முகவர்கள் ஆகியோர் மீது பதியப்பட்ட எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்ட குற்ற வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கோரிக்கையை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி போஸ்பாரா தொடங்கி முக்கிய கிராமங்கள் வழியாக கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது.