காஞ்சீபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி புகாரில் 4 பேர் மீது நடவடிக்கை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி புகாரில் 4 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2022-06-15 08:47 GMT

ஆபரேஷன் கந்துவட்டி திட்டத்தின்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகாஞ்சி போலீஸ் நிலையம் மளிகை தெருவை சேர்ந்த நாகூர் மீரான் (37) என்பவர் காஞ்சீபுரம், சின்னசாமி நகரை சேர்ந்த மகாதேவன் என்பவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அதற்கு வட்டியாக 93 மாதங்களுக்கு ரூ. 4 லட்சத்து 74 ஆயிரத்து 300 ம், கடந்த 2020 நவம்பவர் மாதம் முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை 4 மாதம் ரூ.10,000 வீதம் கடன் தொகை செலுத்தி வந்தநிலையில் ஆகமொத்தம் இதுவரை ரூ. 5 லட்சத்து 14 ஆயிரத்து 300 செலுத்தியுள்ளார். இந்த நிலையில் மகாதேவன் மேலும் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் அசல் மற்றும் கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக நாகூர் மீரான் கொடுத்த புகாரை பெற்று சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோன்று உத்திரமேரூர் போலீஸ்நிலையம் பஜார் வீதி, பிரபு அவென்யூவைச் சேர்ந்த அப்துல் ரவுப் (49) என்பவர் கருவேப்பம்பூண்டி காலனியை சேர்ந்த தணிகைவேல் (42) என்பவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

அதற்கு மாதா மாதம் வட்டி செலுத்தி வந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2 மாதங்களாக வட்டி செலுத்தாமல் இருந்து வந்தநிலையில் ரூ.70 ஆயிரம் தணிகைவேலுவிடம் கொடுத்தபோது அவர் இந்த பணத்தை அசலில் கழிக்காமல் கந்துவட்டியாக கொடுக்க வேண்டும் என்று கூறி வாங்க மறுத்து, இனிமேல் எனக்கு பணம் தராமல் கடையை திறக்க கூடாது என தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக அப்துல் ரவுப் கொடுத்த புகாரை பெற்று உத்திரமேரூர் போலீஸ்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ்நிலையம் சிவந்தாங்கல் செக்போஸ்ட், பேங்களூரு மெயின் ரோட்டை சேர்ந்த ரஞ்சித்குமார் (44) என்பவர் கச்சிப்பட்டு காலனி, கருக்குத் தெருவைச் சேர்ந்த சிம்பு என்ற வினோத்குமார் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை கொடுத்துவிட்டு ரூ.1 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு அதற்கு வட்டியாக ரூ.72,000 செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் பத்திரத்தை திரும்ப கேட்டபோது 4 மாதம் வட்டி பாக்கி ரூ.24,000 உள்ளதாகவும், அதற்கு வட்டி ரூ. 3,840 ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 840 கொடுத்தால்தான் பத்திரம் தருவதாகவும், பணத்தோடு ஒரு வாரத்திற்குள் தரவில்லையென்றால் பத்திரம் கிடையாது எனவும் மீறி கேட்டால் தொலைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காஞ்சீபுரம், பல்லவர்மேடு கிழக்கு பகுதியைச் சேர்ந்த சந்தானம் (36) என்பவர் காஞ்சீபுரம், பாவாசாகிப் தெருவைச் சேர்ந்த பூபதி என்பவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அதற்கு வட்டியாக 38 மாதங்களுக்கு ரூ. 1 லட்சத்து 71 ஆயிரம், அசல் ரூ.50 ஆயிரம் என மொத்தம் இதுவரை ரூ. 2 லட்சத்து 21 ஆயிரம் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதமாக தொழிலில் சரிவர வருமானம் இல்லாததால் வட்டி செலுத்தாமல் இருந்ததால் பூபதி மேலும் ரூ.1 லட்சம் அசல் மற்றும் ரூ.18 ஆயிரம் கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக சந்தானம் கொடுத்த புகாரை பெற்று சிவகாஞ்சி போலீஸ்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி கந்துவட்டி குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி தங்களது புகார்களை போலீசாரிடம் தெரிவிக்கலாம் எனவும், இது போன்று கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்