தங்கப்பதக்கம் வென்று ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை
மாநில அளவிலான ஆக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ராமநாதபுரம் டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.;
ராமநாதபுரம்,
மாநில அளவிலான ஆக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த ராமநாதபுரம் டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
தங்கப்பதக்கம்
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆக்கி முதல் கட்ட தகுதி போட்டியில் ராமநாதபுரம் அணி தேனி, கரூர், வேலூர், கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய அணிகளுடன் மோதி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட அணியும் நெல்லை விளையாட்டு விடுதி மாணவர்கள் அணியும் மோதின. இந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
பாராட்டு
இதை தொடர்ந்து நாமக்கல்லில் நடந்த மாநில அளவிலான ஆக்கி போட்டியில் கலந்து கொண்டு முதல் முறையாக தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் ஆகியோரை கலெக்டர் பாராட்டினார். அப்போதுஆயிர வைசிய மகாஜனசபை தலைவர் மோகன், டி.டி.விநாயகர் மேல் நிலைப்பள்ளி தாளாளர் ரெத்தினசபாபதி, கல்விக்குழு இணைத்தலைவர் சந்தானம், தலைமை ஆசிரியர் வள்ளுவன் ஆகியோர் உடன் இருந்தனர்.