தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தர்மபுரி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2022-07-03 13:58 GMT

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தர்மபுரி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உபரிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையம்புதூர் பைபாஸ் ரோட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் வரவேற்று பேசினார். மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

தமிழகத்தில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க. தான். தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர், பாளையம் புதூர், சேஷம்பட்டி, அகரம் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இதனை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கவனத்தில் கொண்டு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டுவரும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

வேலை வாய்ப்பு

தர்மபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தி.மு.க.- அ.தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். ஒகேனக்கல்லில் 20 பரிசல்களை மர்மநபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இல்லையெனில் தே.மு.தி.க. சார்பில் ஒகேனக்கல்லில் போராட்டம் நடைபெறும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 38 பேர் நாடாளுமன்றத்தில் டம்மியாக இருக்கிறார்கள். அவர்களால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை. தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் தே.மு.தி.க. பற்றி விமர்சனம் செய்துள்ளார். எங்கள் கட்சியை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்களை பற்றி பேசுவதை விட இந்த மாவட்டத்திற்கு தேவையான மேம்பாலம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற அவர் முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் மாநில அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநிலத்துணை செயலாளர் பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர் ஏ.ஆர்.இளங்கோவன், மாநில நிர்வாகிகள் புல்லட் மாரிமுத்து, விஜய் வெங்கடேஷ், தம்பி ஜெய்சங்கர், மாவட்ட அவைத்தலைவர்கள் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர்கள் திருமூர்த்தி, ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்