தினசரி மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு
தினசரி மார்க்கெட்டில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு
அவினாசி
அவினாசி புதிய பஸ் நிலையம் அருகில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி, மளிகை, தின்பண்டங்கள், முடிதிருத்தகம், வாழை இலைபழவகைகள், ஸ்டேசனரி என்பன உள்ளிட்ட 70-க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. அவினாசி பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு குத்தகைதாரர்கள் எடுத்துள்னர் இங்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் "மார்க்கெட் வளாகத்தில் கடைகளில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிய தக்காளி, பழவகைகள், கீரைகள் போன்ற பொருட்களை மார்க்கெட் நுழைவுவாயில் முன்பு கொட்டுகின்றனர். இந்த கழிவுகள் மழைநீரில் நனைந்து சேரும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அங்கு வரும் பொதுமக்கள் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுபற்றி ஏலதாரர்களிடம் தெரிவித்தால் சுங்க வசூல் செய்வது தான் எங்கள் வேலை குப்பைகளை அப்புறப் படுத்துவது எங்கள் வேலை இல்லை என்கின்றனர். எனவே அவினாசி பேரூராட்சி சுகாதாரத்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.