தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்
திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகளில் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.;
தேசிய நெடுஞ்சாலை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருச்சியில் இருந்து காரைக்குடி, ராமேசுவரம் மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள், கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த வழியாக தான் செல்கின்றன.
இதுதவிர உள்ளூர் வாகன போக்குவரத்தும் இந்த சாலையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகம் நிறைந்ததாக காணப்படுகிறது. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இந்த தேசிய நெடுஞ்சாலை பகல், இரவு நேரங்களில் பரபரப்பாக உள்ளது. அதேநேரத்தில் இந்த தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இதில் பெரும்பாலும் திருமயம் அருகே தான் இந்த விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
உயிர் பலி அதிகரிப்பு
திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிரிவு ரோடுகள், வளைவு பகுதி களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதில் உயிர்பலி ஏற்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். இதேபோல தனியார் ஆம்னி பஸ், லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் படுகாயமடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் நீதிபதியின் கார் ஒன்றும் விபத்தில் சிக்கியது. அவரும் படுகாயமடைந்தார். விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில் பலியாவோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
எச்சரிக்கை பலகை
மாரிமுத்து:- "திருமயம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து எச்சரிக்கை பலகைகள் அதிகம் வைக்க வேண்டும். பிரிவு ரோடுகளில் விபத்தை தடுக்க தடுப்புகள் அமைக்க வேண்டும். வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து பகுதியை எச்சரிக்கை வகையில் விழிப்புணர்வு பதாகைகள் அதிகம் வைக்க வேண்டும்.
வாகனங்களில் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் பிரிவு ரோடுகளில் உயர்கோபுர மின்விளக்குகள் எப்போதும் பழுதின்றி எரிய வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ வசதியை தேசிய நெடுஞ்சாலையோரம் ஏற்படுத்த வேண்டும்.''
பாம்பாற்று பாலம்
சண்முகம்:- "தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பொழுது சாலைகளை விரிவுப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமயம் பாம்பாற்று பாலம் விரிவுப்படுத்தி புதிய பாலமாக அமைத்துக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பழைய குறுகிய பலமாகவே இருந்து வருகிறது. இதனை சரி செய்து பாலத்தை விரிவுப்படுத்தி புதிய பாலம் அமைக்க வேண்டும். இந்த பகுதியில் தனியார் கல்லூரிகள் உள்ளது. மாணவர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் கல்லூரிக்கு செல்லும் போதும் வீட்டிற்கு செல்லும் போதும் அதிவேகமாக செல்கின்றனர். அவர்கள் அதிவேகமாக செல்வதை தடுக்க காவல்துறையினர் மூலம் தகுந்த அறிவுரை கூறி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.''
கேமரா வசதி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மோகன் ராஜா:- "வாகனங்களை கவனமாக சாலை விதிகளை பின்பற்றி இயக்க வேண்டும். வாகனங்கள் ஓட்டும் போது செல்போன் பேசாமலும், அருகில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கக் கூடாது. அனைத்து 4 சக்கர வாகனங்களிலும் கேமரா வசதி செய்யப்பட வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பிரதிபலிப்பான் வசதிகள் குறைந்துவிட்டது. அதை சரி செய்ய வேண்டும். வாகனத்தை இயக்குவதற்கு குறிப்பிட்ட கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்றும் அதற்கு மேல் சென்றால் கேமரா மூலம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை தேசிய நெடுஞ்சாலை ஆய்வு செய்யப்பட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பெரும்பாலான இடத்தில் எரிவதில்லை அதை சரி செய்ய வேண்டும்.''
ஆய்வு மேற்கொள்ளப்படும்
புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர்:- "இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சாலையில் வெள்ளைக்கோடுகள் தெளிவாக தெரியும் படி வர்ணம் தீட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடி வேகத்தின் அளவு குறிப்பிட்டு பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த சாலைக்கு ஏற்ப அந்த பலகை இருக்கும். இதனை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.