4 மீனவர்கள் பலி-19 பேர் படுகாயம்
ராமநாதபுரம் அருகே 2 வேன்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 4 மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.;
பனைக்குளம்,
ராமநாதபுரம் அருகே 2 வேன்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 4 மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
2 வேன்கள் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், கடல் அட்டை மீதான தடையை நீக்கக்கோரி நேற்று காலை ராமநாதபுரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அங்கு போராட்டம் முடிந்து அவர்கள் வேனில் மீண்டும் மண்டபம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
எதிரே ராமேசுவரத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயணித்த சுற்றுலா வேன் வந்தது. மண்டபம் அகதிகள் முகாம் பகுதியில் 2 வேன்களும் வந்த போது, எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் மீனவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து உருக்குலைந்தது. இதே போல் சுற்றுலா வேனும் சேதம் அடைந்து பள்ளத்தில் பாய்ந்து நின்றது. 2 வேன்களில் இருந்தவர்களும் படுகாயம் அடைந்து அலறினர். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
4 பேர் பலி
மீனவர்கள் பயணித்த வேனில் இருந்த மண்டபம் அம்பலகாரத்தெருவை சேர்ந்த ரஜப் முகமது (வயது 43) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் (46) ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அன்சர் அலி (35), ராமகோயில்வாடி கருப்பசாமி மகன் சேதுபதி (22) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் 2 வேன்களில் இருந்த 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து மண்டபம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விபத்தில் பலியான 4 பேரின் உடல்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்து குறித்து அறிந்த நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விபத்தில் பலியான மீனவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
போராட்டம்
இந்தநிலையில், பலியானவர்கள் குடும்பத்துக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரணம் கோரி மீனவர்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேன்கள் மோதலில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.