பர்கூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து: ஓய்வு பெற்ற தாசில்தார், மகன் பலி-குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்
பர்கூர் அருகே கார் டயர் வெடித்து தடுப்பு மீது மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தாசில்தார், அவரது மகன் பலியானார்கள். மேலும் குழந்தைகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.;
பர்கூர்:
ஓய்வு பெற்ற தாசில்தார்
தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி புதிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 67). ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது மனைவி சசிகலா (63). இவர் ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவர்களது மகன் ரமேஷ் (39). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மகள் சங்கீதா (31). திருமணம் ஆகி, கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ரமேஷ், அவரது குழந்தைகள் 2 பேர், சங்கீதா அவரது குழந்தைகள் 2 பேர் மற்றும் மோகன், சசிகலா ஆகிய 8 பேரும் காரில், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் உள்ள சசிகலாவின் பெற்றோர் வீட்டிற்கு நேற்று மாலை சென்றனர்.
தந்தை- மகன் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அங்கிநாயனப்பள்ளி அருகே உள்ள அண்ணா நகரில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓய்வு பெற்ற தாசில்தார் மோகன் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும், சசிகலா, சங்கீதா மற்றும் குழந்தைகள் 4 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.