தேங்காய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
ஊத்தங்கரை அருகே தேங்காய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம் அடைந்தனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே தேங்காய் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி, அம்பேத்கர் நகர், கெங்கபிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 17 பேர் ஊத்தங்கரையை சேர்ந்த தேங்காய் வியாபாரி சர்தார் பாய் என்பவருடைய லாரியில் கெங்கபிராம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய் பறிக்க சென்றனர்.
பின்னர் தேங்காய்களை பறித்து லாரியில் ஏற்றி கொண்டு கொல்லநாயக்கனூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கொல்லக்கொட்டாய் வழியாக சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக அங்குள்ள பள்ளத்தில் கவிழ்த்து விபத்துக்குள்ளானது.
17 பேர் காயம்
இந்த விபத்தில் டிரைவர் சர்தார் (வயது 53), தேங்காய் ஏற்ற சென்ற மிட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த 3 பேர், ஊத்தங்கரை அம்பேத்கர் நகரை சேர்ந்த 4 பேர் மற்றும் கெங்கபிராம்பட்டியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 17 பேருக்கு கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்தனர்.
அப்போது சம்பவ இடத்தின் அருகே விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு 3 ஆம்புலன்ஸ் சென்று அனைவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.