விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்

விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை திடீரென நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2022-07-04 17:36 GMT

விருத்தாசலம்

மாணவர் சேர்க்கை நிறுத்தம்

விருத்தாசலம் அரசு பீங்கான் தொழில்நுட்ப கல்லூரியில் 3 ஆண்டு பட்டய கல்வி அளிக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டில் 9 மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 43 மாணவர்களும், மூன்றாம் ஆண்டில் 49 மாணவர்களும் பயின்று வந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்திருந்தது.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை திடீரென நிறுத்தப்பட்டது. இது பற்றி அறிந்ததும் முன்னாள் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பாலக்கரையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு குணசேகரன் தலைமை தாங்கினார். கிருஷ்ணதேவராயர், செல்வமணி, பா.ம.க. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் கோபி, திராவிடர் கழகம் பாலு, மக்கள் அதிகாரம் முருகானந்தம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் ராமர், கந்தசாமி, ஹரிபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும், கல்லூரியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்வித்துறைக்கு மாற்றம்

இதனிடையே விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் நேற்று கல்லூரிக்கு சென்று கல்லூரி முதல்வர் திருமுருகனை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் திருமுருகன், செராமிக் தொழில்நுட்ப கல்லூரி, தொழில் வணிகத் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது உயர்கல்வி துறையின் கீழ் வரும் தொழில்நுட்ப கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்குவோம் என்றார்.

அனுமதி

உடனே ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தொழில்துறை கூடுதல் இயக்குனர் ஜெகதீசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதி அளித்து விட்டதாகவும், உடனடியாக முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என்றார். இதையடுத்து மாணவர் சேர்க்கை தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் ராஜன், நகர தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, வட்டார தலைவர் ராவணன், பேரூராட்சி தலைவர் வேல்முருகன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்