'நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லை' சீமான் பேட்டி
நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சீமான் கூறினார்.
திருவண்ணாமலை,
நாம் தமிழர் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் போளூரில் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாத்தியம் இல்லை
தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியம் இல்லை. இதில் தமிழக அரசு நாடகமாடி வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்குகிறார்கள். இதை யாரிடம் கொடுப்பார்கள். மத்திய அரசிடம்தான் கொடுப்பார்கள். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா?.
அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பீகாரில் நிதிஷ்குமார் மத்திய அரசின் அனுமதி பெற்றா சாதிவாரி கணக்கு எடுத்தார்.
சாதிவாரி கணக்கெடுத்தால் தமிழகத்தில் பூர்வகுடி தமிழர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அதற்காகத்தான் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுக்க தயங்குகின்றது.
இலவசம் தேவையில்லை
இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஊழல் செய்து மக்களை முட்டாள் ஆக்குகின்றன. அமெரிக்கா, ஜப்பான் போன்று தேர்தல் முறைகளை இந்தியாவில் மாற்றி அமைக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடைபெறுகின்றன. அதனால் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும்.
தமிழக மக்கள் யாருமே இலவசம் வேண்டும் என்று இதுவரை கேட்டதில்லை. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற குறுக்கு எண்ணத்தில் மக்களுக்கு இலவசங்களை கொடுத்து அடிமை ஆக்குகின்றனர்.
அதேபோல் அறிவை வளர்க்கும் கல்வியையும், உயிரைக் காக்கும் மருத்துவமும் முறையாக மக்களுக்கு தர வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செயல்படுத்துவோம். இலவசமே தேவை இல்லை. 100 நாள் பணியினால் இன்று விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் 100 நாள் பணிகள் தேவையில்லை. நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. தனித்துதான் நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.