ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 9½ பவுன் நகை அபேஸ்
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 9½ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 9½ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை திருட்டு
நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் நகை திருடும் சம்பவங்கள் அடிக்கடி அறங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி உள்பட 4 பெண்களிடம் மொத்தம் 26 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுபோல ஓடும் பஸ்சில் பர்ஸ், செல்போன் திருட்டு உள்பட பல்வேறு சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மீண்டும் நகை திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நாகர்கோவில் இருளப்பபுரம் அம்மன் கோவில் பின் புறம் வசித்து வருபவர் செந்தில்குமார். இவருடைய மனைவி ரதி (வயது 37). இவர் நேற்று கன்னக்குறிச்சியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல ராமன்புதூர் சந்திப்பில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சானது கோணம் தொழில் மையம் அருகே வந்த போது ரதியின் கழுத்தில் கிடந்த 9½ பவுன் நகையை காணவில்லை. அதை பஸ்சில் அவருடன் வந்த யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தொியவந்தது.
பெண்கள் அச்சம்
இதனால் அதிர்ச்சி அடைந்த ரதி கூச்சலிட்டார். தொடர்ந்து பஸ்சை சாலையோரம் நிறுத்தி பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் மர்ம நபர்கள் சிக்கவில்லை. இதுகுறித்து ரதி ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நகை திருட்டு சம்பவங்களில் பெண்கள் தான் ஈடுபட்டு வருவதாக போலீசார் கூறுகிறார்கள். இவர்கள் பயணியோடு பயணியாக வந்து நகையை திருடி விட்டு தப்பிச் சென்றுவிடுகிறார்கள். மர்ம நபர்களின் தொடரும் இந்த அட்டூழியத்தால் நகை அணிந்து பஸ்சில் பயணம் செய்யவே பெண்கள் அச்சப்படுகிறார்கள். எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.