சுங்கக் கட்டண உயர்வை கைவிட வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்கக் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-03-10 11:12 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் சுங்கக்கட்டணம் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விலைவாசி உயர்வு, வருவாய் குறைவு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதன் விளைவுகளை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, 2 கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 29 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தபட உள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.85 வரை இருக்கும் என்று தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, ''நாடு முழுவதும் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த 3 மாதங்களில் செய்யப்படும்'' என்று அறிவித்து இருக்கிறார்.

ஆனால், அதன்பின் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், அதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகளைக் கூட மத்திய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. எனவே, தமிழ்நாட்டில் 60 கிமீக்கு ஒரு சுங்கச் சாவடி என்ற அளவில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக் கட்டணத்தை மட்டுமே தண்டல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பயனளிக்க வேண்டிய சீர்திருத்தங்களை செய்யாமல், சுங்கக்கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வது எந்த வகையிலும் நியாயமல்ல. எனவே, சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்