பொள்ளாச்சியில் புதிய பஸ் நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்-மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு

பொள்ளாச்சியில் புதிய பஸ் நிலையம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-12-26 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் புதிய பஸ் நிலையம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.

புதிய பஸ் நிலைய திட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது பொள்ளாச்சி வட்டார இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு நகரங்களில் புதிய பஸ் நிலையங்கள் மற்றும் பஸ் நிலைய விரிவாக்க திட்டங்களை அறிவித்து உள்ளதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. பொள்ளாச்சியில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள பகுதி மிகவும் குறுகலானது. மேலும் தினமும் கூலி வேலை செய்து பிழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். பஸ் நிலையம் அமைக்கும் போது அந்த பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் மக்கள் மத்தியில் எதிர்ப்பினையும், அதிருப்தியை உருவாக்குவதோடு, அவர்களின் வாழ்க்கைக்கு இடையூறாக அமையும். பொதுமக்கள் நகரில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதால் கட்டண சுமையும், காலவிரையமும் ஏற்படும். தற்போது 2 பஸ் நிலையங்கள் பொள்ளாச்சிக்கு போதுமானதாக உள்ளது. எனவே போக்குவரத்தை சீர்படுத்தி தற்போது உள்ள பஸ் நிலையத்தை பயன்படுத்தி கொண்டு, புதிய பஸ் நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சமுதாய கூடம் கட்டுமான பணிகள்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-சிங்காநல்லூர், வடசித்தூர் பகுதிகளில் கூலி வேலை செய்து கொண்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லாததால் உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இதனால் வருமானத்தின் ஒரு பகுதியை வாடகைக்கு கொடுப்பதற்கு செலவாகி விடுகிறது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடசித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் சமுதாய கூடம் கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு, 75 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. தற்போது ஒராண்டாக எந்த பணியும் நடைபெறவில்லை. இதுகுறித்து ஊராட்சியில் கேட்டால் நிதி வரவில்லை என்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்