ஆவின் பால் விற்பனை... தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தும் நாம் அதை வாங்கி உண்கிறோம் என்பது கவலையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது என்றும் கேள்வியெழுப்பினர்.
அமுல், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் டெட்ரா பேக்கில் பொருட்களை விற்பனை செய்வது போல ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றால் அதனை தடை செய்ய தயார் என்றும், இதுகுறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது கூறிய நீதிபதிகள், சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்ய முடியுமா என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், வாட்டன் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.