நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா: காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் வைபவம்

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-07-21 22:18 GMT

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந்தேதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.

4-ம் திருவிழாவில் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வீதியுலா நடந்தது. 9-ம் திருநாளான நேற்று முன்தினம் செப்புத்தேரில் அலங்கரிக்கப்பட்ட காந்திமதி அம்பாள் வீதியுலா புறப்பட்டு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

10-ம் திருநாளான நேற்று மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சீர்வரிசைகளுடன் ஆடிப்பூர முளைக்கட்டும் திருவிழா நடந்தது. விழாவில் அம்பாளின் மடியில் முளைக்கட்டிய தானியங்கள், பலகாரங்களை நிரப்பி சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்