65 சதவீத வாக்காளர்கள் ஆதார் எண், வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65 சதவீத வாக்காளர்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65 சதவீத வாக்காளர்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆதார் எண்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் www.nvsp.in மற்றும் Voters Helpline App என்கிற இணையதளத்தில் தாங்களாகவே ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளலாம்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கருடா கைபேசி செயலி மூலமாகவும் மற்றும் இதற்கான படிவம் 6B-ஐ பூர்த்தி செய்வதன் மூலமாகவும் ஆதார் எண்ணை தங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 65 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர். இதேபோல் மீதமுள்ள வாக்காளர்கள் முன்வந்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
அடையாள அட்டை
அவ்வாறு இணைத்து கொள்வதன் மூலம் வருங்காலங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் களையப்பட்டு விடும். மேலும் முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் மற்றும் மூலம் E-EPIC வண்ண வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்தல் நேரங்களில் அவர்களுக்கு குறுஞ்செய்திகளும் வந்து சேரும்.
எனவே பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தவறாது ஆதார் நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் அருகில் உள்ள தாசில்தார் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று (படிவம்- 6பி) பூர்த்தி செய்து வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.