ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவு:அரசு திட்டங்கள் பெற முடியாத தம்பதி10 ஆண்டுகளாக சரிசெய்ய முடியாமல் தவிப்பு

ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய முடியாமலும், அரசு திட்டங்கள் பெற முடியாமலும் கணவன்- மனைவி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.;

Update: 2023-10-13 20:34 GMT

எடப்பாடி

ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய முடியாமலும், அரசு திட்டங்கள் பெற முடியாமலும் கணவன்- மனைவி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ஆதார் அட்டை

எடப்பாடி ஒன்றியம் சித்தூர் அருகே கொல்லங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (வயது 50). இவருடைய மனைவி கலா (45). இருவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு 1900 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவன்- மனைவி இருவரது ஆதார் அட்டையிலும் 1900 என குறிப்பிடப்பட்டுள்ளதால் இன்றைய தேதியில் அவர்களது வயது 123 ஆக கணக்கிடப்படுகிறது.

அரசு திட்டங்கள்

எந்த வொரு அரசு திட்டங்களுக்காக விண்ணப்பம் செய்தாலும் இவர்களது பிறந்த ஆண்டு தவறுலாக உள்ளது. அதனை சரிசெய்து வரும்படி கூறுகிறார்கள். கணவன்- மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அலுவலகங்களுக்கும், ஆதார் சேவை மையங்களுக்கும் நடையாய் நடக்கின்றனர். ஆனால் அவர்களது முயற்சியில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அந்த தம்பதி செய்வது அறியாது தவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கணவன்- மனைவி இருவரும் பள்ளிக்கூடம் சென்றது கிடையாது. ஏழைகளாகிய நாங்கள் அன்றாட வேலைக்கு சென்றால்தான் எங்களது நாட்களை நகர்த்த முடியும். இருவருக்குமான ஆதார் அட்டையில் 1900 என குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் கார்டை வாங்கும் போது நாங்கள் கவனிக்கவில்லை.

செய்வதறியாது தவிப்பு

ஒருசில நாட்கள் கழித்து அதனை சரி செய்ய ஆதார் சேவை மையத்துக்கு சென்றோம். பிறந்த தேதிக்கான சான்று கேட்டனர். அதனை வாங்க வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சென்றால் பிறந்த தேதி, கல்விச்சான்று வேண்டும். இல்லையென்றால் ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டை திருத்த முடியாது என்கிறார்கள். ஆதார் அட்டை பதிவு செய்யும் போது அலுவலர்கள் செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வது.

ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு குளறுபடியால் 10 ஆண்டுகளாக அரசின் எந்தவொரு நலத்திட்டங்களும் பெற முடியவில்லை. இதனால் செய்வது அறியாது உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எங்களது நிலையை அறிந்து ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வேதனையுடன் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்