மறைமலைநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
மறைமலைநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட திருக்கச்சூர், மறைமலைநகர் ஜி.எஸ்.டி.சாலை, மறைமலைநகர் அருகே உள்ள தனியார் கார் தொழிற்சாலை ஆகிய இடங்களில் நடந்து செல்லும் பொதுமக்களை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தது. இந்த குறித்த புகாரின்பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் 3 கொள்ளையிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் செம்மஞ்சேரி அருகே உள்ள கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 26), என்பவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது.