திருவள்ளூர் அருகே வழிப்பறி செய்த வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு போலிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மணவாளநகர் கபிலர் நகரை சேர்ந்த சொனாடிகா என்ற வெங்கடேசன் (26) ஞானசேகரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஞானசேகர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி ஞானசேகரின் பாக்கெட்டில் இருந்த ரூ.1500 பணம் மற்றும் செல்போனை பறித்தார்.
பயத்தில் ஞானசேகர் சத்தம் போட்டதால் வெங்கடேசன் கத்தியை தரையில் தேய்த்துக் கொண்டு யாராவது கிட்ட வந்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து ஞானசேகர் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.